கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். இதனிடையே கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது.


கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தண்ணீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று புகுந்தது. அப்போது கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள், கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.




காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனப்பகுதிகளுக்குள் வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை வனத்துறையினர் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதேபோல கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியை கரசி தாக்கியுள்ளது. தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வரும் ஐயப்பன் (58) என்பவர், அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் பதுங்கியிருந்த கரடி ஒன்று, திடீரென பாய்ந்து அவரை இடது காலை கடித்துக் குதறியது. இதனால் பயங்கர காயம் ஏற்பட்டு அலறல் சத்தமிட்டுள்ளார். இதனை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை கரடியிடமிருந்து காப்பாற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 


இதையடுத்து ஸ்டேன்மோர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐயப்பனுக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி தேயிலை தோட்ட தொழிலாளர்களை தாக்கி வரும் நிலையில், மேலும் ஒருவரை தாக்கியதை அறிந்த பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உறவினர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள வனத்துறையினரை முற்றுகையிட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தற்போது இஞ்சிப்பாறை பகுதியில் கரடி சுமார் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து பேரை கரடி தாக்கி உள்ளதால், அப்பகுதியில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து பலன் அளிக்காமல் கூண்டை திருப்பிக் கொண்டு சென்றதாகவும், இதனால் அப்பகுதியில் கரடிகள் அடிக்கடி இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகிறது எனவும் கூறிய அபப்குதி மக்கள், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.