கோவையில் இருவேறு இடங்களில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா, போதை மாத்திரை, போதை மருந்து உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சூலூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடமான சூலூர் தென்னம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை வைத்திருந்த கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீபதி (45) மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் (64) ஆகிய 2 நபர்களை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல கோவை குறிச்சி வெங்கடாச்சலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போத்தனூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் சென்ற காவல் துறையினர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (29) என்பவர் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அபுபக்கர் சித்திக்கை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அபுபக்கர் சித்திக் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்