கோவையில் நில உரிமையாளரிடம் வருமான வரி செலுத்தாமல் இருக்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். கோவை பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் பாலதண்டபானி. இவர் தனக்கு சொந்தமான ஆலாந்துறை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் பாலதண்டபானியின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அந்த விவசாய நிலம் விற்ற பணத்திற்கு வருமான வரி செலுத்தவில்லை எனவும், அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என ஆய்விற்கு சென்ற கோவை வருமான வரித் துறை உதவி ஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார். அவ்வாறு செலுத்தாமல் பாலதண்டபானிக்கு சாதகமாக மாற்றுவதற்கு தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதையடுத்து இரு தரப்பும் பேசி, இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே இலஞ்சம் தர மனம் இல்லாத பாலதண்டபானி இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 


இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு வந்த பாலதண்டபானி, ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு காசோலையையும் டேனியல் ராஜிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் வருமான வரித் துறை உதவி ஆணையர் டேனியல் ராஜை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இடைத்தரகராக செயல்பட்ட ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவரையும் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் விசாரணையின் போது, டேனியல் தனக்கு உடல் நலக் குறைவு இருப்பதாக கூறியதை அடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பிற்காக சேர்த்தனர். அவருக்கு உடல் நலக் குறைவு இல்லை என்பது உறுதியானதை அடுத்து டேனியல் மற்றும் ஸ்ரீதரன் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கைது செய்யப்பட்ட டேனியல் ராஜ் மற்றும் ஆடிட்டர் ஸ்ரீ தரன் தொடர்பான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத சுமார் 5.75 இலட்ச ரூபாய் மதிப்பிலான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண