கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பாஜக மூத்த தலைவர்கள் இப்பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் பேசியுள்ளோம். கோவை, திருப்பூரில் பெட்ரோல் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்க உள்ளேன். இச்சம்பவங்கள் குறித்து விசாரிக்க பாஜக சார்பில் நான்கு பேர் கொண்ட 4 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேத மதிப்பு, பாதிப்பு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு கொடுக்கும் ரிப்போர்ட்டை உள்துறை அமைச்சருக்கு அனுப்ப உள்ளோம். 


பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்ற டிஜிபி அறிக்கையை வரவேற்கிறோம். பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். காவல் துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் கூட, தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். 15 மாத காலமாக தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை


கோவை காவல் துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன். பாஜக தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விடமாட்டேன். இன்னும் இரண்டு ஆண்டில் திமுக ஆட்சியில் இருக்காது. நாளை பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு சீர் குலைய கோவை மாநகர காவல் துறையே காரணம். காவல் துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும். நடுநிலையோடு காவல்துறை நடந்து கொண்டால் கண்டிப்பாக பாஜக ஒத்துழைப்பு அளிக்கும். 




எங்களுக்கு காவல்துறையினர் மீது மரியாதை உள்ளது. ஆனால் கோவையை பொறுத்தவரை காவல்துறை நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. நாளை தடையை மீறி கோவையில் பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும். பட்டியலின அரசியல்வாதி குறித்து கருத்து சொன்னதற்காக ஒருதலைபட்சமாக காவல் துறை நடவடிக்கை எடுத்து, பாஜக கோவை மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பதிவு செய்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. காவல்துறை ஏவல் துறையாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 


பாஜக தொண்டர்கள் உரிமைக்காக பேசினால் கைது என்பது கண்டனத்துக்குரியது. பொது மக்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எதையும் பார்த்துக் கொண்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. பாஜகவிற்கும் திமுகவிற்கும் நடைபெறும் போரில் காவல் துறை உள்ளே வரக்கூடாது. வன்முறையை பாஜக விரும்பவில்லை. பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். முதலமைச்சர் விழித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண