திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் கெளசல்யா. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு கெளசல்யா வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், கடந்த 2016 ம் ஆண்டில் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தில் பணியாற்றி வந்த கெளசல்யா, சாதி ஆவணப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனிடையே கோவையை சேர்ந்த சக்தி என்பவரை கெளசல்யா மறுமணம் செய்து கொண்டார். தற்போது விருப்ப ஓய்வு பெற்ற கெளசல்யா, கோவை வெள்ளலூர் பகுதியில் ‘ழ’ என்ற சலுன் கடையை வைத்துள்ளார். அந்த கடையின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பார்வதி திருவோது கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கடையினை திறந்து வைத்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி திருவோது, ”கெளசல்யா உடன் இருக்கும் நிறைய பெண்களுக்காக தான் இங்கே வந்துளேன். எல்லா பெண்களுக்கும் காதலிக்கவும், அவர்களின் வாழ்க்கை வாழவும் முழு உரிமை உள்ளது. ஆனால் நிறைய பேர் அந்த உரிமையை திருடப் பார்க்கிறார்கள். அதைத் தாண்டி கெளசல்யா அவருக்கான ஒரு இடத்தை உருவாக்கி தொடர்ந்து போராடி வருகிறார். அவர் மீதுள்ள மரியாதை காரணமாக கெளசல்யாவை வாழ்த்த வந்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கெளசல்யா. திரைப்பட ஹீரோக்களை விட, இவரை பலோ அப் பண்ண வேண்டும். கெளசல்யா வாழ்க்கை, பயணம், போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்து செய்திகள் படிப்பதன் மூலமாக அறிந்து கொண்டேன்.
வழக்கமாக இதுபோன்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதில்லை. ஆனால் இங்கு ஒரு புது வாழ்க்கையை துவங்குகிறார்கள். அதனைக் கொண்டாட வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தமிழில் ஏன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”காதல் விஷயம் மட்டுமே கேரக்டராக வருகிறது. திரும்ப திரும்ப நான் காதலிக்கும் படியான பெண்கள் கேரக்டர்கள் கிடைத்தது. வித்தியாசமான கேரக்டர் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் மக்களுக்கு போர் ஆகிவிடும் என்பதால் ப்ரேக் எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்தார். கெளசல்யா வாழ்க்கையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நான் நடிப்பேனா எனத் தெரியவில்லை. அப்படி ஒரு ப்ராஜ்க்ட் இருந்தால் என்னால் முடிந்த சப்போர்ட் பண்ணுவேன்” எனப் பதிலளித்தார்.
இதையடுத்து பேசிய கெளசல்யா, ”சமூக வேலைகளை முழு நேரம் செய்ய வேண்டும் என்பதற்காக சலூன் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளேன். இனி சமூகத்திற்கு எனது முழு பங்களிப்பை அளிப்பேன். அதுமட்டுமின்றி என்னைப் போன்ற பெண்கள் தொழில் முனைவோராக உதவி செய்வேன். மத்திய அரசுப் பணியை நான் ராஜினாமா செய்து 6 மாதமாகிவிட்டது. அப்பணியில் இருந்ததால் சாதி ஒழிப்பிற்கு பங்களிக்க என்னால் முடியவில்லை. அதைவிட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்து விட்டேன். பார்வதியை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அழைக்க காரணம், அவர் சாதி மறுப்பு எண்ணம் உடையவர். பெண்கள் சார்ந்து நிறைய படங்கள் எடுத்துள்ளார்கள். இப்படி உள்ளவர்கள் பேசும் போது மக்களிடம் சேரும். அந்த வேலையை அவர் சரியாக செய்கிறார்” எனத் தெரிவித்தார்.