திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பேச்சு அநாகரீகமாக மாறி வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு பாஜகவினர் பொறுப்பான பதில் அளிப்பார்கள். ராகுல் காந்தி மேற்கொண்டது நடை பயணம் அல்ல வாக்கிங். அது ஜோடோ யாத்திரை அல்ல, தோடோ யாத்திரை.
இந்தியாவை பிரிப்பதற்கான யாத்திரையாக அது அமைந்திருந்தது. ராகுல் காந்தியின் நடைப் பயணத்திற்கு கிடைத்த வெற்றியை குஜராத் தேர்தலில் பார்த்திருக்கிறோம். அனைத்து தொகுதிகளும் தோல்வி. ஆனால் பாஜக மேற்கொள்ளும் நடைபயணம் என்பது ஒரு வருட காலம் மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து ஒரு வருட காலம் அவர்களோடு ஒன்றி இருப்போம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாட்ச் பில் மட்டுமல்ல, எனது முழு வரவு செலவு கணக்கு, சொத்து விபரங்களை ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி தி.மு.க. எம்.எல்.ஏ. துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறோம். இலவச தொடர்பு எண்ணை அறிமுகம் செய்து அந்தந்த பகுதியில் தி.மு.க. பினாமிகள் சேர்த்து வைத்த சொத்து பட்டியலையும் பொதுமக்களாகவே தெரிவிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.
சாமானிய மக்களைப் பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் எம்.ஜி.ஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இன்று என்னை கேட்கிறார்கள். இன்று இரண்டாவது முறையாக சாமானிய மனிதனை பார்த்து கேட்கிறார்கள். முதலமைச்சரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் 2 லட்சம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், சாராய ஆலை பங்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சொத்து குவிப்பு வழக்கில் வழக்கறிஞருக்கு அவர் கொடுக்கும் ஒருநாள் சம்பளம், சாமானிய மனிதன் பத்தாண்டுகள் சம்பாதிக்கும் காசு. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ஊழல், சாராய ஊழல், டாஸ்மாக் வருமானம், மொரிசியஸ் அனுப்பிய பணம் உள்ளிட்டவற்றையும் வெளியிடுவோம். தி.மு.க. தொட்டுவிட்டார்கள். முடிவுரை பா.ஜ.க. எழுத இருக்கிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரசுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ, அதேபோல் நாங்கள் கேட்கும் கேள்வி தி.மு.க.விற்கு முடிவுரை எழுதும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்