கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், சமூக ஊடகங்களில் அவர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை 3.5 லட்ச ரூபாய் என்ற தகவல் பகிரப்படுவது குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது. ரபேல் விமானம் தயாரித்த நிறுவனம் தான் இந்த வாட்ச் செய்தார்கள். ரபேல் விமானத்தின் பாகத்தில் இருந்து மொத்தம் 500 வாட்சுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதான் இந்த வாட்சை கட்டி இருக்கின்றேன். இது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன், இது என் தனிப்பட்ட விஷயம் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ கட்டியிருக்கிறார்.
அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வெளியிட வேண்டும். அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும் போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தெரிவிப்பேன்” எனக் கூறினார்.
இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ”அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாட்ச் பில் மட்டுமல்ல, எனது முழு வரவு செலவு கணக்கு, சொத்து விபரங்களை ஏப்ரல் முதல் வாரத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி திமுக எம்எல்ஏ துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலில் வெளியிட இருக்கிறோம். சாமானிய மக்களைப் பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இன்று என்னை கேட்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “பில் இருக்கிறதா? இல்லையா? என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்கிறோம். ஆம்/ இல்லை என்பது தானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும். மே மாதம் வெயில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்... கோழி கொக்கரக்கோன்னு...’ என்பது போலவே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்