பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பயணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயணம் 100 நாட்கள் நடைபயணம் முடிந்த நிலையில், 101 வது நாளாக கோவையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் திங்களூர் மாரியம்மன் கோவிலில் முன் தொடங்கியது. நடை பயணத்தை மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


இந்த பயணம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவு பெற்றது. அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”தொண்டர்களின் அன்புக்கு நன்றி. மத்திய அமைச்சர் வருவதற்காக சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அன்று நடக்காத யாத்திரை இன்று சிங்காநல்லூரில் நடைப்பெற்றது. மக்களுக்காக நடத்தப்படும், மக்களின் யாத்திரை தான் இது. இது அண்ணாமலை யாத்திரை கிடையாது. என் மண் என் மக்கள் யாத்திரை என்ற பெயருக்கு நம்முடைய தலைவர்கள் யோசித்தார்கள். ஆனால் இன்று 216 தொகுதிகளில் இதை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கோவை மக்கள் அரசியலை பெரிய கண்ணோட்டத்தில் பார்க்க கூடியவர்கள்.


கோவையில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தினால் 20 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டது. எல்லா நாடுகளுக்கும் கோவையில் இருந்து பொருட்கள் செல்கின்றது. அரசியல் சூழ்நிலை மாற்றத்தை கோவை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். கடந்த 10 ஆண்டு மோடியின் ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர். கோவை மக்கள் நாகரிகமான மக்கள். 2024 பாராளுமன்ற தேர்தலில் கோவையில் தாமரை மலரும். வருகின்ற 27ம் தேதி குழந்தைகளுடன், குல தெய்வம் கோவிலுக்கு செல்வது போன்று குடும்பத்துடன் வாருங்கள். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 2024 தேர்தலில் தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்த போகும் உணர்வு இப்போதே தோன்றுகிறது. உணவிலிருந்து குடிநீரிலிருந்து அனைத்து விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
எல்.முருகன் ஐயாவை நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய குடும்பத்தில் இன்னும் விவசாயம் செய்து வருகிறார்கள்.  எந்த கட்சியும் செய்யாது. ஆனால் இன்றும் எல்.முருகனுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவர் கூட எம்.பியாக ஆகலாம்.


பாஜக அனைவரையும் மதிக்கும், அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும். கோவையில் தான் முதல் நிகழ்ச்சி முருகனுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானதி அக்கா எப்படித்தான் சட்டமன்றத்தை சமாளிக்கிறாங்கன்னு தெரியவில்லை. ஆனால் அவரை சமாளிக்க முடியாமல் இன்று முதல்வரே பதில் சொல்லியுள்ளார். எம்.எல்.ஏ ஆபிஸ் எப்பவுமே மூடிதான் இருக்கும். ஆனால் வானதி அக்காவின் எம்.எல்.ஏ ஆபிஸுக்கு ஐ.எஸ்.ஒ சான்றிதழ் வாங்கியுள்ளது. மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக வானதி சீனிவாசன் இருந்துள்ளார்.


மக்களின் மருத்துவர் சரஸ்வதி. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களையும் கற்கண்டாக பாஜக வைத்துள்ளது. யாத்திரை உணர்வுபூர்வமாக நடத்தி இறுதி தருவாயில் இருக்கின்றோம். நம்முடன் இருக்கும் படை காசு கொடுத்து சேர்த்தது இல்லை தானே சேர்ந்த படை. ரோட்டுல்ல நடக்க முடியவில்லை என பெண்கள் சொல்லுகின்றனர். ரோட்டில் கஞ்சா விற்பனை, மறுபக்கம் டாஸ்மாக்கில் சாரயம் விற்கின்றனர். இது மாற வேண்டும். இது சரியான நேரம். இந்த நேரத்தை விட்டுவிட கூடாது. பூச்சாண்டி மாயவி, லேகியம் விற்பவர் என்றல்லாம் என்னை சொல்லி வருகிறார்கள். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. திருநீறு பூசிக்கொண்டு ஆண்டியாக யாத்திரை நடத்தி வருகின்றோம்.


தமிழ்நாட்டின் காவல் தெய்வமாக மோடி உள்ளார். 27ம் தேதி பெரிய பாட்டிலில் லேகியம் விற்க போறோம். அது குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் கூட்டமாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி திமுக அரசு பயன்படுத்தி வருகின்றனர். வளர்ந்த குழந்தைகளுக்கு பெயரை வைத்து வருகின்றனர். சாரயம் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆமை புகுந்த வீடும், திமுக ஆட்சியும் ஒன்று. 20 சதவீதம் வாக்கு வங்கியை வேல் யாத்திரை காலத்தில் தாண்டி விட்டோம். 30 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி விட்டோம். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செல்போனில் இருக்கும் எண்கள் அனைவரிடமும் தினமும் பேசுங்கள். அவர்களின் வாக்குகளை பாஜகவிற்கு வாங்க வேண்டுவது உங்களுடைய கடமை. மனித குண்டு வெடிப்பு சம்பவம் கோவையில் நடந்துள்ளது. அதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவைக்கு முதலில் என்.ஐ.ஏ காவல் நிலையம் கொண்டு வருவோம். கடவுள் நம்மை ஒருமுறை காப்பாற்றி விட்டார். மீண்டும் நடக்காமல் இருக்க மனிதர்கள் தான் வேண்டும். கோவைக்கு பணம் கொடுப்பது நாம், பெயர் வைப்பது இவர்கள். கோவை வளர்ச்சிக்கு எதுவுமே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு பெரிய நகரத்திற்கு விமான நிலையம் விரிவாக்கம் இல்லை. வளர்ச்சிக்கும் திமுகவிற்கு எந்த சம்பத்தமும் இல்லை. அதை தினமும் உணர்த்தி வருகின்றனர். திமுக ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை நன்றாக செய்வார்கள். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் பெட்ரோல் , டீசல் விலை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 9 இலட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் பொய் சொல்லியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.