ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் ராஜ்யசபா உறுப்பினராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக பாஜக தொண்டர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். காரணம் 8.5 கோடி தமிழ் மக்களின் இணைப்பு பாலமாக எல்.முருகன் அவர்களை ராஜ்யசபா உறுப்பினராக்கியுள்ளது மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.


பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பிரதேச முதல்வர், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்திற்கு வரவேண்டிய வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக எல்.முருகன் இருப்பார். கடந்த முறை உறுப்பினராக இருந்த போதும் இவருடைய பணிகள் மிகவும் முக்கியமானவை. இரண்டு துறைகளை செயல்படுத்தி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கொண்டு சென்றார். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுவடையச் செய்யும்” எனக் கூறினார்.


இதனையடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”பிரதமர் மோடி அவர்கள் இரண்டாவது முறையாக மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்துள்ளதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலிருந்து பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைப்பு பாலமாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது தமிழக மக்கள் மீது பிரதமர் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தை போற்றியும், திருக்குறளை போற்றியும் பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தின் உள்கட்டமைப்புகள் அபரிவிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.


இதனைதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி மட்டுமல்லாது அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் எல்.முருகன் அவர்கள் தொடர்ந்து கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வார். வேட்பாளர் அறிவிப்பது பாஜக அகில இந்திய தலைமையின் முடிவாகும். எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வோம்/ நடிகை திரிஷா குறித்த அவதூறு கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது, இது கருத்து சுதந்திரம் கிடையாது எனவும், காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ம் ஆண்டுக்கு முன்பு பி.எம்.ஆவாஸ் யோஜனா திட்டமானது, இந்திரா காந்தி யோஜனா திட்டம் என்கிற பெயரில் வெறும் 18 லட்சம் வீடுகள் மட்டுமே குறைந்த மானியத்தில் கட்டப்பட்டு வந்தன. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் வீடு கட்டி வருகின்றனர்.  இதற்கு கலைஞர் கருணாநிதி இல்லம் என பெயர் வைப்பதில் என்ன காரணம் இருக்கிறது என்பதைத்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றனர்.


அனைத்து திட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைப்பது நல்ல ஆட்சிக்கு உதாரணமாக இருக்காது. தமிழக பட்ஜெட்டை பொருத்தவரை சென்னையின் கழிவுநீர் வசதிகளுக்கு 400 கோடி கொடுக்கப்பட்டதுபோல் கோயம்புத்தூரிலும் கொண்டு வரப்படும். கலைஞர் நூலகம் வரும் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. வெறும் எழுத்தளவில் மட்டுமே அறிவிப்புகள் உள்ளன. தமிழக மக்களை பொருத்தவரை இது ஏமாற்றத்திற்குரிய பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி அதிகமாகி வருகிறது. ரயில்கள் வரும்போது அதிக டிராபிக் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போத்தனூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி இரட்டிப்பாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையமும் போத்தனூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படும், வந்தே பாரத் ரயில் போன்று புல்லட் ரயில் வரலாம். அதற்கான பணிகளை பிரதமர் வலுவாக செய்து வருகிறார்” என தெரிவித்தார்.