கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க நேரடியாக முடியவில்லை என எப்போதும் வழக்கமான செய்யும் டிராமாமை வேட்பு மனுவிற்கு கொண்டு வந்துள்ளனர். எப்போதும் இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது அரசியல் கட்சிகளின் முறையாக வைத்துள்ளோம்.
சீரியல் நம்பர் 15, 27 ஆகிய இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்று இந்திய நீதித்துறை முத்திரைத்தாளிலும், இன்னொன்று நீதித்துறை சாராத முத்திரைத்தாளிலும் தாக்கல் செய்துள்ளோம். இரண்டு வேட்பு மனுக்கள் பண்ணும் போதும் குழப்பம் இருந்தது. ஒரு தரப்பு வழக்கறிஞர் இப்படி செய்ய வேண்டும், இன்னொரு தரப்பு வழக்கறிஞர் அப்படி செய்ய வேண்டும் என்றதால், இரண்டு விதமாகவும் வேட்பு மனுதாக்கல் செய்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்து, இன்னொரு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தோல்வி பயம்
இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல், வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. உச்சபட்சமாக இந்த முறை வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரியே விளக்கம் அளிக்கும் நிலை வந்துள்ளது. எனது வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது. சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 இரண்டும் நாங்கள் தாக்கல் செய்ததுதான். அவை எப்போது பதிவேற்றினார்கள் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் கேட்க வேண்டும்.
வேட்பு மனுவை நிராகரிக்க இது காரணங்கள் அல்ல. நிராகரிக்க வேண்டுமென பொய்யான செய்திகளை சொல்கிறார்கள். பொய்யான செய்திகளை சொன்னால் தான் வேட்பு மனுவை நிராகரிக்க முடியும். இது போட்டி தேர்வு அல்ல. கையெழுத்தில்லை, தேதி போடவில்லை என நிராகரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளது. இதற்கு மேல் விபரங்கள் வேண்டுமெனின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.
அதிமுக, நாதக எதிர்ப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணையின் போது, அதிமுக, நாம் தமிழர், சுயேட்சைகள் எதிர்ப்பையும் மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புது சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அப்போது அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்த போது விதிமுறைகளை மீறி நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் முத்திரைத்தாளில் பிரமாண பத்திரம் தந்துள்ளதாகவும், அதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
அண்னாமலையின் வேட்பு மனு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற பயன்பாட்டிற்கு அல்லாத முத்திரைத்தாளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஒரு வேட்பு மனு நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.