கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது, அ.தி.மு.க., நாம் தமிழர், சுயேட்சைகள் எதிர்ப்பையும் மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புது சர்ச்சை எழுந்தது.


வேட்புமனு சர்ச்சை:


இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அப்போது அண்ணாமலை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது விதிமுறைகளை மீறி நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் முத்திரைத்தாளில் பிரமாண பத்திரம் தந்துள்ளதாகவும், அதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். அண்னாமலையின் வேட்பு மனு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற பயன்பாட்டிற்கு அல்லாத முத்திரைத்தாளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஒரு வேட்பு மனு நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்த பின், அதிமுக வழக்கறிஞர்களும் நாம் தமிழர் வழக்கறிஞர்களும் செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது பேசிய அதிமுக கோபாலகிருஷ்ணன், “மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை குறித்து புகார் அளிக்க வந்தோம். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் அனைத்துமே அப்டேட் செய்ய வேண்டும். நாங்கள் 4.30 மணிக்கு பிரிண்ட் எடுத்து வரும் வரை அண்ணாமலை தாக்கல் செய்த பழைய அபிடவிட் இருந்தது. 3 மனுக்களுக்கும் ஓரே அபிடவிட் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்கு மாலையே வந்தோம். அண்ணாமலை வேட்புமனு இன்று மாலை  5.17 மணிக்கு பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். புதியதாக அபிடவிட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.




நாம் தமிழர் போராட்டம்


தேர்தல் விதிமுறைகளை மீறி என்ன வேண்டுமாலும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம். நாங்கள் புகார் கொடுக்க வந்தவுடன் புது அபிடவிட் வாங்கி வைத்து இருக்கின்றார். தேர்தல் அதிகாரி மற்றும் பா.ஜ.க சேர்ந்து இதை செய்து இருக்கின்றனர். சட்டப்படி தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜகவிற்கு இவ்வளவு ஆதரவாக செயல்படுபவர்கள், நாளை தேர்தல் வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றினாலும் மாற்றுவார்கள். மாநில தலைவருக்காக தேர்தல் கமிசன் வளைந்து கொடுத்து செயல்படுகின்றது. நாளை ஜெயித்தாலும் தோற்றதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


தவறுகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளை செய்து இருக்கின்றனர். 5.15 மணிக்கு புகார் கொடுக்க வந்தவுடன் புதிய அபிடவிட் இப்போது கொடுத்து இருக்கின்றனர். தமிழக அரசு பா.ஜ.க மாநில தலைவர் வெற்றி பெற வேண்டும் என உதவி செய்கின்றாரோ என்ற சந்தேகம் இருக்கின்றது. ED,CBI ஆகியவற்றிக்கு பயந்து இந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டு பா.ஜ.கவிற்கு ஆதரவாக செயல் படுகின்றனர். இந்த செயல்கள் திமுக அரசு ஆதரவுடன் நடைபெறுகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது” எனத் தெரிவித்தார்.


நாம் தமிழர் போராட்டம்:


இதையடுத்து பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், விதிமுறைகளை மீறி தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.