கோவை மாநகராட்சிக்குட்பட்ட 80 மற்றும் 81 வது வார்டுகள் குனியமுத்தூர் பகுதிக்குள் வருகிறது. நேற்றிரவு மினி ஆட்டோ ஒன்றில் 3 பெரிய பொட்டலங்கள் எடுத்து செல்லப்படுவதை பார்த்த அப்பகுதி அதிமுகவினர், ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 3 பெட்டிகளிலும் 98 ஹாட்பாக்ஸ்கள் இருப்பது தெரியவந்தது. ஓட்டுனரிடம் விசாரித்த போது உரிய பதில் அளிக்காததால் அதிமுகவினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட கொண்டு வரப்பட்ட பரிசுப் பொருட்கள் எனக்கூறி, காவல் நிலையத்திற்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் அதிமுகவினர் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ஹாட்பாக்ஸ்களை ஏற்றி வந்த ஆட்டோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




அதிமுக போராட்டம்


இதனிடையே சுகுணாபுரம் பகுதியில் வீடு ஒன்றில் பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறி, திமுக ஆதரவாளர் கார் ஒன்றை அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்த ஏதுவாக அதிமுகவினர் கலைந்து போக வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து முற்றுகை செய்ததால், அனைவரையும் கைது செய்தனர். 




இந்நிலையில் அதிமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாக கூறி, ராமநாதபுரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலின் பேரில், அதிமுகவினர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டுமென கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் காவல் துறையினர் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும், அதிமுகவினர் வாக்கு சேகரிக்க இடையூறு செய்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். 


கரூர் திமுகவினர் மீது தாக்குதல்




இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் மாவட்ட திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கோவை மாநகராட்சியின் 88 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் சகோதரரான சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான செங்குளம் அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளனர். இந்த சூழலில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திடீரென அந்த வீட்டின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.