கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாவட்டம் கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. வெளியூர் குண்டர்கள், ரவுடிகள் 2 ஆயிரம் பேரை சிறையில் இருந்து விடுதலை செய்து, கோவையில் இறக்கியுள்ளனர். பொது மக்கள் மற்றும் திமுகவை எதிர்ப்பவர்கள் அவர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். புகார் அளிக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. காவல் துறையினரே வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி திமுகவினர் செயல்படுகின்றனர்.
கோவையில் பல தேர்தல்கள் நடைபெற்று இருந்தாலும், இது போன்ற தேர்தலை சந்தித்தது இல்லை. 20 வருட நிம்மதியை கெடுத்துள்ளனர். எல்லா ஊரிலும் ரவுடிகள் உள்ளனர். அதனால் பதட்டமான சூழல் உள்ளது. ஓட்டு போட வருபவர்களை மிரட்டவும், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். கோவை காவல் துறை மீது நம்பிக்கை இல்லை.காவல் துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும். வெளியூர் ரவுடிகள் வெளியேற்ற வேண்டும். பாதுகாப்பிற்கு துணை இராணுவம் வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதனால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்து அதிமுக வெற்றியை தடுக்க முயற்சிக்கிறார்கள். அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். கோவையில் உள்ள வெளியூர்காரர்களை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “கோவை மற்றும் திருப்பூர் மாநகரில் அதிமுக வெற்றி பெறும் என்பதால், திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை மட்டுமே கொண்ட உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி கொறடா வேலுமணிக்கு சாவுமணி அடிப்போம் என அநாகரிகமான எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவின் அராஜக செயல்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. திமுகவினருக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து விலக வேண்டும். அல்லது அந்த அதிகாரிகள் மாற்றப்பட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.