கோவையில் பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - காரணம் என்ன..?

கோவை மாநகர வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலணை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது.

Continues below advertisement

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதனிடையே கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து, வருகின்ற 31ம் தேதியன்று கோவை மாநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷணன் அறிவித்தார். இந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அப்போது கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டுமென்ற சி.பி.ராதாகிருஷ்னன் அறிவிப்பை, பாஜக மாநில தலைமை ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முழு அடைப்பு நடத்தினால் சட்டப்படி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலணை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி அண்ணாமலை கோவை மாவட்ட பாஜக தலைவர்களுடன் உரையாடி கோவை மாநகர மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், அதனை ஏற்று 31ம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola