கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜத்தில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரும், திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவில் இருந்து செல்லும் இளைஞர்கள் தவறுதலான வழிகாட்டுதலினால் போலி விசாவைக் கொண்டு வெளிநாடுகளில் வேலைக்காக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தீவிர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அதில் பிலிப்பைன்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள கடைகளில் புத்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும். திராவிட கட்சிகள் தமிழை வளர்க்கவில்லை. அதற்கு பதிலாக ஆங்கிலத்தை தான் வளர்த்துள்ளது. ஆங்கில கல்விக் கூடங்கள் தான் தமிழகத்தில் பெருகி உள்ளது” எனத் தெரிவித்தார்.
1998 கோவை குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை கம்பேர் செய்து கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். அப்போது செய்தியாளர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பேசிய அவர், “நான் யாரையும் பயமுறுத்தவில்லை. அச்சமடைய வைக்கவில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த பாஜகவினர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர் சந்திப்பு பாதியில் முடிவடைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்