கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன‌. இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.


அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக உள்ளதால், இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.




இதுதொடர்பாக ஏபிபிநாடு செய்தி வெளியிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “சிறுவானி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90% நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”இது குடிநீர் ஆதார பிரச்சனை என்றும், சிறுவானிக்கு வரும் தண்ணீரை அணை கட்டினால் தண்ணீர் வராது எனவும், அணை கட்டப்பட்டால் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சிறுவானி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த செய்தி தங்களுக்கும் வந்திருப்பதாகவும், கேரளா அரசு 70 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் என்றும், தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம் அளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண