மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே,  கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் மோதலால் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது. அதன் உச்சபட்சமாக தான், இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கொடுமைப்படுத்தியதோடு, ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும், மணிப்பூர் விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கோவையில் வாழும் மணிப்பூரை சேர்ந்த குக்கி இனத்தவரான டயானா என்பவர் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூரில்  குக்கிகள் மீது மெய்திகள் தாக்குதல் நடத்துகின்றனர். பட்டியலினத்தை சேர்ந்த மெய்திகள், பழங்குடியினராக மாற முயற்சி செய்து வருகிறார்கள். அப்படி அவர்கள் மாற்றப்பட்டால் குக்கிகளுக்கு என எதுவும் இருக்காது. எங்களது நிலங்களை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலம் நடத்தியதை பார்த்ததில் இருந்து, மிகவும் கஷ்டமாக உள்ளது. அந்த வீடியோவை பார்த்த நாளான்று என்னால் தூங்க முடியவில்லை. அவர்கள் குக்கி பெண்கள் என்பதால் தான் நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.




கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசு நடவடிக்கை இல்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். யாரும் உயிரிழந்து இருக்க மாட்டார்கள். இன்று வரை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் உள்ளனர். பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. குக்கிகள் பலர் காடுகளுக்குள் பதுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. உணவு தேடி வரும் போது, மெய்திகள் பார்த்தால் சுட்டு கொல்கிறார்கள். குக்கிகளுக்கு என  தனி நிர்வாகம் வேண்டும். மெய்திகளுடன் சேர்ந்து எங்களால் வாழ முடியாது. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அரசு எதுவும் செய்வதில்லை. எப்படி எங்களால் அவர்களுடன் வாழ முடியும்?” எனத் தெரிவித்தார்.


குக்கி இனத்தை சேர்ந்த மெர்சி ஏபிபி நாடுவிடம் கூறுகையில், “மெய்தி இன மக்கள் குக்கி இன மக்களின் அடையாளத்தையும், நிலங்களையும் அபகரிக்க பார்க்கிறார்கள். இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஊர்வலம் நடத்திய ஒரு வீடியோ மட்டும் வெளியே வந்துள்ளது. இன்னும் பல கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் முதலமைச்சர் இணைய சேவையை முடக்கியுள்ளார். கலவரம் துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூர் முதலமைச்சர் மெய்தி என்பதால், இப்பிரச்சனையில் அமைதியாக இருக்கிறார். அரசு ஆதரவுடன் குக்கிகள் மீது தாக்குதல் நடக்கிறது. மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே குக்கிகளுக்கு என தனி நிர்வாகம் வேண்டும். அதுவே அமைதி திரும்ப ஒரே தீர்வாக அமையும்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண