நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலை  பாதையில் ஒற்றைக் காட்டு யானை காரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காட்டு யானைகள் உலா:


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. அதேபோல மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.


இதனால் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் அதிக அளவிலான வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் பகல் நேரங்களிலேயே அதிகரித்து காணப்படுகிறது. மலைப்பாதைகளில் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருகின்றன. இதனால் காட்டு யானைகளை வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.




உயிர் தப்பிய பயணிகள்:


இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனிடையே மேல் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றனர். அப்போது திடீரென ஒற்றை காட்டு யானை மலைப்பாதையில் உலா வந்தது.


கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் காரை அந்த ஒற்றை யானை வழிமறித்து நின்றதி. இதனால் அச்சம் அடைந்த காரில் பயணித்தவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இரண்டு பக்கங்களிலும் நின்றிருந்த வாகன ஓட்டிகள் யானையை விரட்ட கூச்சல் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை அந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர்.


யானைகள் நடமாட்டம்:


கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கனவே பேருந்து கண்ணாடியை உடைத்தது குறிப்பிடத்தக்கது. யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட வேண்டுமெனவும், வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கோத்தகிரி வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.