கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு மற்றும் அரிசியை எடுத்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 


மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.



பல்கலைக் கழக வளாகம் முழுவதும் சுற்றி வந்த யானை பல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில்  வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை எடுத்து சாப்பிட்டது. இது குறித்து அங்கிருந்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததனர். இதன் பேரில் அங்கு விரைந்து வந்த வனத் துறையினர் அந்த யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினார். இதனிடையே காட்டு யானை காவலாளி அறையில் இருந்த மாவு மற்றும் அரிசியை எடுத்து சாப்பிடும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் பதிவு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது.




காட்டு யானை உயிரிழப்பு


கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட   மோதூர் வனப் பகுதியில் சிறுமுகை வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியான பெத்திகுட்டை பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வன அலுவலர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், உயிரிழந்தது சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க யானை என்பதும், இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. 




யானையின் உடலை உடற்கூராய்வு செய்த பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர்த்தேக்க பகுதியான பெத்திகுட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ள நிலையில், அவ்வப்போது யானைகள் நோய்வாய் பட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண