கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. 56 வயதான இவர் விவசாயியாக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்ற 58 வயதான விவசாயி வேலுச்சாமியின் உறவினர். இந்நிலையில் இருவரும் பொன்னாக்கணி பகுதியில் உள்ள வேலுசாமியின் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, இருவரும் மது அருந்தி உள்ளனர். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரது உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்தப் பகுதி நெகமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்ததை அடுத்து, நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மது அருந்திய இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச் சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவர்கள் குடித்த மது பாட்டில், உணவு வகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் விசாரணையில் திடீர் திருப்பமாக சயனைடு கலந்த மதுவினை குடித்து இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இருவரும் குடிபோதையில் இறந்ததாகவும், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் இருவரது குடும்பத்தினரும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர், மனோகரனின் மருமகன் சத்யராஜ், இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்று குடும்பத்தினரை மூளைச் சலவை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் பி.இ. பட்டதாரி சத்யராஜிடம் விசாரணை நடத்தினர்.
இதில் குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. சத்யராஜ், மனோகரன் மகள் மாசிலாமணி (26) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பிரச்னை ஏற்படும்போதெல்லாம் மனோகரன் தலையிட்டு மகளை அழைத்துச் சென்றார். ஆறு மாதங்களுக்கு முன், தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையால், மனோகரன், தன் மகள் மாசிலாமணியை, பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை சத்யராஜுடன் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், மனோகரன் அண்மையில் தனது நிலத்தை 32 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்தத் தொகையை பொன்னகனியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த தொகையை கொள்ளையடிக்க சத்யராஜ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே 7 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆன்லைனில் சயனைடு வாங்கினார். மதுவில் கலந்து விட்டு, மனோகரனுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அந்த மதுவை தனது நண்பர் வேலுசாமியுடன் இணைந்து குடித்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யராஜை கைது செய்தனர்.