கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வால்பாறையை ஒட்டியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி ஆகிய 4 வன சரகங்கள் உள்ளன. வால்பாறை மற்றும் மனாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் இருந்து வெளிவரும் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களுக்குள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் அடிக்கடி செல்வது வழக்கம்.


இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு கடந்த 28 ம் தேதியன்று ஒரு யானைக்கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது மற்ற காட்டு யானைகள் வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில், சுமார் 4 முதல் 5 மாதம் மதிக்கத்தக்க குட்டி காட்டு யானை ஒன்று கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்துள்ளது. மேலும் வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை தனியாக சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி காட்டு யானையை மீட்டனர்.



பின்னர் குட்டி காட்டு யானையை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். ட்ரோன் மூலம் பிரிந்த குட்டி யானையின் காட்டு யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர். குட்டி காட்டு யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க ஆற்று நீரில் குளித்து வைத்து, குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று காட்டு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானை, காட்டு யானை கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. தனது தாய் யானையையும், கூட்டத்தையும் பார்த்த குட்டி யானை ஓடிச் சென்று தாய் யானையுடன் இணைந்து கொண்டது.


தொடர்ந்து அப்பகுதியில் 4 கண்காணிப்பு குழுவினர்களை கொண்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் குட்டி யானை கூட்டத்துடன் தேயிலை தோட்டப்பகுதியில் சேர்ந்து சுற்றி திரியும் வீடியோ காட்சிகளையும் வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கூட்டத்தை பிரிந்த குட்டி யானையை கூட்டத்தை வனத்துறையினர் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாயுடன் சேர்ந்து குட்டி யானை வனப்பகுதியில் சுற்றி வந்த நிலையில், ஒரு இடத்தில் தாய் யானையின் அரவணைப்பில் குட்டி யானை உறங்கியுள்ளது. வனத்துறையினரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.