தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் பாதைகள் உள்ளன. இதில் முதல் இரயில் பாதை 17 கி.மீ. தொலைவும், இரண்டாவது இரயில் பாதை 23 கி.மீ. தொலைவும் கொண்டது. இப்பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதேபோல கேரள மாநிலத்திற்குள் வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் அவ்வப்போது இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதையில் வேகமாக இரயிலை ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் இரயில்களை வேகமாக இயக்கி வருவதால் இந்த விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இதனிடையே யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யானை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் அடிக்கடி ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் 7.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. அதன்படி இரண்டாவது பாதையில் மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டர் உயரமும், 18.3 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு அகலமான இரும்புப் பாளங்களை இரயில் பாதையின் குறுக்கே பொருத்தும் பணி நடைபெற்றது. இதன்காரணமாக அப்பாதையில் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டது. பணிகள் நிறைவறைந்ததை அடுத்து, இந்த பாதையில் இரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை அமைக்கபப்டுவதன் காரணமாக இரயிலில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்