கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது.


ஆட்சி அமைக்கும் வரை ஓயமாட்டோம்:


இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2017 ல் இந்த இயக்கத்தை துவங்கிய போதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இலட்சோப லட்சம் தொண்டர்கள் வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு சிலர் சுயநலனுக்காக சுய இலாபத்திற்காக விலை போயிருக்கலாம். ஆனால் கொண்ட கொள்கை, இலட்சியம் அடையும் வரை ஓயமாட்டோம் என்ற தொண்டர்கள் என்னுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.


அமமுக பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு காணாமல் போய் விடும் என சிலர் சொல்கிறார்கள். இது டெண்டர் பார்ட்டிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். பழனிசாமி ஆட்சி பொறுப்பில் இருந்த போதும், அது அடிமைகளின் ஆட்சி என தூக்கி எறிந்து தொண்டர்கள் வந்தார்கள். சிலர் சதியால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி கனியை பெறாவிட்டாலும், இயக்கம் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்பதே நமது ஒரே லட்சியம்.


பூத் கமிட்டி:


எத்தனை சோதனைகள் வந்தாலும், வெற்றிக்கனியை நாங்கள் அடைவோம். நம்மை பார்த்து பயத்தால் உளறுகின்றனர். சில நிர்வாகிகளை விலை பேசி வாங்கி சென்ற பிறகும், இயக்கம் கட்டுக்குலையாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகள் கிளைகள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவில் இயக்கதை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


குக்கர் சின்னத்தை பட்டி தொட்டி எங்கும் நீங்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பூத் கமிட்டி அமைக்க வேண்டும். துரோகத்தை மூலதனமாக நயவஞ்சகம் செய்தவர்கள் படுகுழியை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது. அவர்கள் உடம்பில் ஓடுவது துரோக ரத்தம். நமது உடம்பில் பாய்வது விசுவாச இரத்தம். எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. இது பஞ்ச பாண்டவர் கூட்டம். அது துரியோதன கூட்டம்.




துரோகம்:


அதிமுக கட்சியை சிலர் துரோகத்தால் கைப்பற்றியுள்ளனர். பணபலத்தால் ஆடிக் கொண்டிருக்கிறவர்கள், வருங்காலத்தில் காணாமல் போவார்கள்.  அதை அமமுக நிறைவேற்றிக் காட்டும். துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அவர்கள் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்த பழனிசாமி மீது இருந்த கோபத்தால் மக்கள் தீய சக்திக்கு ஆட்சி பொறுப்பு தந்து விட்டார்கள். திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.


தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் வீழ்த்த வேண்டிய கடமை அமமுகவிற்கு உள்ளது. பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது. இரட்டை இலையை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. கூட்டணி பற்றி கவலைப்படாமல் பணி செய்யுங்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அம்மா ஆட்சி அமைத்திட பாராளுமன்ற தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


வீழ்ச்சியை சந்திப்பார் இபிஎஸ்:


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவர் குருபூஜைக்கு செல்லாத பழனிசாமி தேர்தல் வருவதால் செல்கிறார். 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அவர், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிந்து வன்னியர் மக்களை ஏமாற்ற 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை தேர்தல் நேரத்தில் அறிவித்தார். இதனால் 106 சமுதாய மக்களை பாதிக்கும் என அம்மக்கள் எதிர்ப்பாக மாறினார்கள். பழனிசாமியின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.


எடப்பாடி தொகுதியில் ஜெயிக்க ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணையும் வைத்தார். தேர்தலில் பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது உறுதி. பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். ஒருவேளை கூட்டணியில் நிற்க முடியாத சூழல் வந்தால், தனித்து நிற்கவும் தயார். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். பிரதமர் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடிய பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். இல்லையெனில் தனித்தும் நிற்கலாம். அமமுக யாரையும் நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.