கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 17 வயது சிறுவனை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில், 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் யமுனா. 19 வயதான இவர், பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். அந்த பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வருவது வழக்கம். அப்படி பெட்ரோல் போட வந்த போது அச்சிறுவனுக்கும், அப்பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுவனின் பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெர்னியா ஆபரேஷன் செய்ய சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நிலையில் அவரை அப்பெண் மருத்துவனைக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறிய யமுனா, சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கடந்த 26-ஆம் தேதி பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கோவை மாவட்டம் செம்மேடு பகுதிக்கு சென்ற இருவரும் அங்கு தங்கியிருந்த நிலையில், அடுத்த நாள் பொள்ளாச்சி திரும்பியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தபோது, அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்து கொண்டதாக நடந்தவற்றை  தெரிவித்துள்ளார். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து சிறுவனை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அந்த பெண்ணிடம் காவல் துறையினர் விசாரித்ததில், சிறுவனை திருமணம் செய்ததும், பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தல், போக்சோ சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் யமுனா மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் யமுனாவை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கட்டாய திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின் பேரில் 19 வயது பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.