கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி. 32 வயதான இவர், டிரைவராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நவ இந்தியா பகுதியில் இருந்து ஆவராம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் சத்திய பாண்டி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் தலைகவசம் அணிந்தபடி, 2 மோட்டர் சைக்கிளில் வந்தனர். அந்த கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. இதையடுத்து அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்திய பாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.


இதில் சத்திய பாண்டிக்கு தலை, கை, கால், உடல் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டி விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்திய பாண்டி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் சத்திய பாண்டியின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2020ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சத்திய பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சத்திய பாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் சத்தியபாண்டி மீது பல்வேறு இடங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே சத்தியபாண்டியை கொலை செய்த கும்பல் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்திய பாண்டியின் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய காயங்கள் உள்ள நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்தற்கான அடையாளங்கள் சரியாக தெரியவில்லை எனவும், உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண