மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இரண்டாவது சீசன் துவங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டின் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்காக குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்து செல்கின்றனர்.


8 பேர் உயிரிழப்பு:


இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் நீலகிரிக்கு வந்ததால், போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.  இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 57 சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் சுற்றுலா பேருந்தில் நீலகிரிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். பின்னர் அப்பேருந்தில் தென்காசிக்கு திரும்பியுள்ளனர்.


அப்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் நிதின் (15), தேவிகலா (36), முருகேசன் (65), முப்புடாதி (67), கெளசல்யா (29), இளங்கோ (64), செல்வன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 30 க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


போக்குவரத்து நெரிசல்:


இந்த விபத்து குறித்து குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து காரணமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்னூரில் நடந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.


​உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.