2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 685 பேர் குடிமைப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்ற பெண் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4ஆவது இடத்தை ஐஸ்வர்யா வர்மா என்ற தேர்வரும் பெற்றுள்ளனர்.
இந்த 685 பேரில் 244 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இருந்து 73 பேரும், ஓபிசி பிரிவில் 203 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்சி, எஸ்டி பிரிவில் இருந்து 105 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 42ஆவது இடத்தை ஊட்டியைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ என்ற பெண் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கோவையைச் சேர்ந்த ரம்யா 46ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர் முயற்சி இல்லை
யூபிஎஸ்சி தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்வர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்யாததே, தமிழ்நாட்டில் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஐஏஎஸ் ஆகக் காரணம் என்கிறார் ஸ்வாதி. 3ஆவது முயற்சியில் ஐஏஎஸ் ஆக உள்ள ஸ்வாதி முதல்முறை முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வோடு திரும்பி உள்ளார். இரண்டாவது முறை 126ஆவது இடத்தைப் பிடித்து ஐஆர்எஸ் ஆனவர், இப்போது 42ஆவது இடத்தைப் பிடித்து, ஐஏஎஸ் ஆக உள்ளார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் தனியார் தஞ்சாவூர் வேளாண் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் ஸ்வாதி ஸ்ரீ. சென்னை மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியிலும் அறம் ஐஏஸ் அகாடமியிலும் படித்தவர், சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நேர்முகத் தேர்வுக்குப் பயிற்சி பெற்றுள்ளார்.
யூபிஎஸ்சி தேர்வு முறை குறித்து 'ஏபிபி நாடு'வுக்கு ஸ்வாதி ஸ்ரீ அளித்த சிறப்புப் பேட்டி:
’’எனக்குத் தெரிந்தவரையில் தேர்வர்கள் கூடுதலான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்வுகள் குறித்த வழிகாட்டலும் குறைவாகவே இருக்கிறது.
முதன்மைத் தேர்வுக்கு முக்கியத்துவமின்மை
ஏராளமான தேர்வர்கள் யூபிஎஸ்சி தேர்வில், முதல்நிலைத் தேர்வுக்கே கூடுதல் முக்கியத்துவம் தந்து தயாராவதாக உணர்கிறேன். இப்போது முதன்மைத் தேர்வு வடிவிலேயே முதல்நிலைத் தேர்வுகள் கேட்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தேர்வர்கள் குறைவாகவே பயிற்சி எடுக்கின்றனர். படிப்பது அதிகமாக இருந்தாலும் பயிற்சி (Tests) எடுப்பது குறைவாகவே உள்ளது. பிற மாநிலத் தேர்வர்கள், நிறையத் தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுகின்றனர். தமிழகத்தில் தேர்வுகளை எழுதுவதன் மூலம் பயிற்சி பெறுவது குறைவாகவே உள்ளது.
விடாமுயற்சி அவசியம்
மாநிலம் முழுவதும் நிறையப் பேர் யூபிஎஸ்சி தேர்வை எழுத முன்வருகின்றனர். ஆனால் ஓரிரு முயற்சிகளில் வெற்றி கிடைக்காத சூழலில், வேறு தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றுச் சென்றுவிடுகின்றனர். யூபிஎஸ்சி தேர்வைப் பொறுத்தவரை விடாமுயற்சியும் பொறுமையும் மிக முக்கியம்.
உயரிய இலக்கு முக்கியம்
யூபிஎஸ்சி தேர்வு 4, 5ஆண்டு காலத் தயாரிப்பைப் பிடிக்கும் தேர்வு என்று எண்ணத் தேவையில்லை. கடின உழைப்புடன் திட்டமிட்டுப் படித்தால், முதல் முயற்சியிலேயே வெற்றி பெறலாம். எல்லா வெற்றியாளர்களையும் கவனித்துப் பார்த்தால், பொதுவான சில திட்டமிடல்களையே கொண்டிருக்கின்றனர்.
- முதலில் தங்களின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
- அடிப்படையைத் தெளிவாகப் படிக்க வேண்டும்.
- நடப்பு நிகழ்வுகளில் அப்டேட்டடாக இருக்க வேண்டும்.
- நிறையத் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். அவற்றில் நாம் செய்யும் தவறுகளைக் கண்டுணர்ந்து, தவிர்க்க முடியும்.
- முதல் முயற்சியையே கடைசி முயற்சிபோல நினைத்து, தீவிரமாகத் தயாராக வேண்டும். அப்போது வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சிறப்பான அடித்தளமும் அனுபவமும் கிடைக்கும்.
திட்டமிட்டுப் படித்தால் யார் வேண்டுமானாலும் நிச்சயமாக ஐஏஎஸ் ஆகலாம்’’.
இவ்வாறு ஸ்வாதி ஸ்ரீ தெரிவித்தார்.
யூபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வாகும் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் ஆண்டுதோறும் குறையும் நிலையில், இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.