கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 64 வயதான காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் மோனிகா (24). பாலகிருஷ்ணனின் தங்கை பாக்கியம் (வயது 55). இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள எல்.ஆர் ஜி. நகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் பண்ணீர் செல்வம் (வயது 60). இவரது மருமகள் ஜமுனா (வயது 30). ஜமுனா சிறுமுகையில் புதிய வீடு வாங்கியுள்ளார். இதன் கிரகப் பிரவேசம் நாளை நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியம் அவரது மருமகள் ஜமுனா (வயது 40) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் அவரது மகள் மோனிகா, தங்கை பாக்கியம், மருமகள் ஜமுனா, கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் இன்று மாலை நான்கு மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். பாலகிருஷ்ணன் காரில் உட்கார்ந்திருந்தார். பேரன் பேத்திகள் ஆற்றின் கரையோரப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் பாக்கியம், ஜமுனா, சகுந்தலா, கஸ்தூரி ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கூக்குரல் இட்டனர். அவர்களது கூக்குரலை கேட்டதும், காரில் இருந்து இறங்கி வந்த பாலகிருஷ்ணன் உடனடியாக ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம், ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்துச் செல்லப்பட்டார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் பாலகிருஷ்ணன், மகள் மோனிகா, கஸ்தூரி ஆகியோரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்துலாவின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில், மாலை நேரம் இருட்டத் தொடங்கியதால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை கைவிட்டனர். இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட உப்பு பள்ளம் பகுதியில் பவானி ஆற்றில், கோவையை சேர்ந்த 6 மாணவர்கள் சுமார் 3.30 மணிக்கு குளிக்க வந்துள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, திடீரென நீர் வரத்து அதிகரித்துள்ளது. அப்போது 4 நபர்கள் ஆற்றில் இருந்து தப்பித்து வெளியே சென்று விட்டனர். உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கெளதம் (16) மற்றும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் நீரில் மூழ்கி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளூர் பரிசல் காரர்கள் மற்றும் மீன்பிடிக்கும் நபர்களைக் கொண்டு உடல்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். பவானி ஆற்றில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்