கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 3877 மாணவர்களுக்கு பட்டங்களையும், 71 மாணவர்களுக்கு பதக்கங்களையும் ஆளுநர் வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், ”இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதும், பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும். நமது நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இதை எண்ணி மாணவர்கள் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்த புதிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
உறுதியான, திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியா தற்போது உருவாகி வருகிறது. சர்வதேச அளவில் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி இருக்கின்றன. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. கோவிட் பாதிப்பிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தியாக சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்க்கின்றன.
உலக அளவில் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ள நாடாக இந்தியா உள்ளது. முன்பு வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்த நிலையில், தற்போது 90,000ககும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவை அனைத்தும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராக்கெட், விண்வெளி கருவிகள், பெருங்கடலின் ஆழத்தை அளக்கும் கருவிகள் என கற்பனைக்கு எட்டாத பல்வேறு விஷயங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர். உலக அளவில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக விளங்கி வருகிறது. மொபைல் போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் நாம் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். விரைவில் ஆட்டோமொபைல் உற்பத்தியிலும் நாம் முன்னணியிடத்தை பிடிக்க உள்ளோம்.
எந்த ஒரு நாடு வளர்ச்சி அடையும் போதும் அது மற்ற நாடுகளிடையே சிக்கல்கள் உருவாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஸ்ரீலங்காவின் வளர்ச்சியையும் அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் கூறலாம். அந்த சூழல் சீனாவிற்கு சாதகமாக அமைந்தது. இந்த சூழலில் ஸ்ரீலங்காவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா பொருளாதார உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இந்தியா வளர்ச்சி அடையும் போது குறிப்பாக கோவிட் பாதிப்பின் போது மக்கள் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருந்த நேரம், தடுப்பூசியை உருவாக்கிய நாடுகள் அதனை விலை உயர்த்தி விற்பனை செய்தனர். ஆனால், இந்தியா சுயமாக கோவிட் தடுப்பூசியை உருவாக்கி, சுமார் 150 நாடுகளுக்கு இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்காக நாம் நமது விஞ்ஞானிகளுக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இதுவே புதிய இந்தியா.
உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா அதற்கும் வழிகாட்டும் விதமாக மாற்று எரிசக்திக்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு பிரதமர் சூரிய எரிசக்தி பயன்பாட்டுக்கான அமைப்பினை உருவாக்கிய போது சில நாடுகள் மட்டுமே இணைந்தன. ஆனால் இன்று அந்த அமைப்பில் 120 நாடுகள் உள்ளன. பல நாடுகள் இணைவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். ரஷ்யா உக்ரைன் போர் சூழலிலும் உலகமே இரண்டாக பிளவு பட்ட போது இந்தியா சரியான நிலைப்பாட்டினை எடுத்து போருக்கு எதிரான கருத்தினை வெளியிட்டது. அதை இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொண்டனர். சுமார் 10,000 இந்தியர்கள் உக்கரேனில் சிக்கித் தவித்த போது போர் நிறுத்தம் கோரிய இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாடுகளும் போர் நிறுத்தம் செய்தது. இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சர்வதேச நாடுகளுக்கு வழிகாட்டும் விதமாக உலகின் சக்தி மிகுந்த நாடுகளான 20 நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது பெருமைக்குரிய விஷயமாகும். உலகப் பொருளாதாரத்தில் 85 சதவீதத்தை உள்ளடக்கிய சர்வதேச நாடுகள் பங்குபெறும் ஜி-20 மாநாட்டில் இந்தியா உலகப் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு கருத்துகளை முன்வைக்க உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் தமிழ்நாடு உட்பட 215 பகுதிகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. மாநாட்டில் பங்கு பெற வரும் வெளிநாட்டினருக்கு நமது கலாச்சாரத்தையும், நமது பண்பாட்டையும், நமது வளர்ச்சியையும், நமது நாட்டின் பெண் சக்தியையும் காட்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிர்வாக காரணத்திற்காக இந்தியா பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் நாம் அதையே பின்பற்றி வந்தோம். ஆனால் இன்று பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் மொத்த இந்தியாவும் ஒரே குடும்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. குறிப்பாக தமிழ்நாடு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என வளர்ச்சி விகிதத்தில் சமநிலையின்றி இருந்தது. ஆனால் இப்போது அனைத்து பகுதிகளுக்குமான சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால் கடந்த எட்டு ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் சமையலுக்கான கேஸ் எரிவாயு சேவை சென்றடைந்துள்ளது. சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிக்காக மக்கள் அரசை எதிர்பார்த்து இருந்த நிலை மாறி, இந்த அரசு மக்களின் சக்தியை நம்பி மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக உருவாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியாகவே பார்க்கின்றனர். எந்த ஒரு பகுதியையும் பின்னுக்கு தள்ளாமல் அனைவருக்குமான வளர்ச்சியை இந்தியா கொடுத்து வருகிறது.
இன்றைய போட்டிகளையும் வருங்காலத்தில் ஏற்படும் போட்டி சூழலையும் எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களை, இளைஞர்களை உருவாக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை சீக்கிரமாக கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி இளைஞர்களை வெறும் காகிதம் பெற்ற பட்டதாரிகளாக மட்டுமல்லாமல் எந்த ஒரு வேலைக்கும் தகுதியான பட்டதாரியாக அவர்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி, புதிய பொருட்களை கண்டுபிடிப்பது, புதிய விஷயங்களை உருவாக்குவது போன்ற செயல்களில் கல்வி நிறுவனங்களும் இளைஞர்களும் ஈடுபட வேண்டும். இவையே இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்” எனத் தெரிவித்தார்.