நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அதிகளவில் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒருநாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 50 வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி உருது பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.
அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாணவியும் என்னால் தான் முடியும் என்று மாறி மாறி பேசியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்து காட்டி விடலாம் என்று கூறி, மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாத்திரை செயல்பட தொடங்கியதால் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் மயங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகளை மீட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குல்துன் நிஷா, ஆயிஷா, ஜெய்பா, நாசியா ஆகிய 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ”4 மாணவிகளும் மாத்திரையை இடைவெளி விடாமல் வேகமாக சாப்பிட்டுள்ளனர். அதில் 4 மாணவிகள் 30 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயக்கம் அடைந்தவர்களை மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர். இதுகுறித்து உதகை அரசு மருத்துமனை முதல்வர் மனோகரி கூறுகையில், ”தற்போது மாணவிகள் நிலை நன்றாக உள்ளது. மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்கு பின்னர்தான் அதன் வீரியம் தெரியவரும். மாணவிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ”குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்