திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


அப்போது அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கான இடம், சுகாதாரம் நாள்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு, சம்பளம் மற்றும் ஏதேனும் பிரச்சினைகள் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரப்பில் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களது பணி பாதுகாப்பு மற்றும் தமிழகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது குறித்து பீகாரில் இருந்து வந்த குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் தொழில் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் பீகார் குழுவினர் ஆய்வு கூட்டம் நடத்தினர். வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது என பீகார் குழுவினர் தெரிவித்தனர்.




இந்நிலையில் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் இன்று திருப்பூருக்கு வருகை தந்தனர். ஜார்கண்ட் காவல் துறை அதிகாரி தமிழ்வாணன், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் காங்கேயம், வெள்ளகோவில், உடுமலை போன்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனை குறித்தும், ஆய்வுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு தாங்கள் ஆய்வு குறித்து தற்போது சொல்ல இயலாது எனத் தெரிவித்து விட்டு சென்றனர். இதேபோல ஜார்கண்ட் மாநில குழுவினர் கோவையிலும் ஆய்வு நடத்த உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண