கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து, கோவையில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 22 ம் தேதி கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னர் மேற்கு மண்டலத்தில் 9 இடங்களில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்தது. இதில் பொள்ளாச்சியில் 5 சம்பவங்களும், மேட்டுப்பாளையத்தில் 2 சம்பவங்களும், ஈரோடு மற்றும் புளியம்பட்டியில் தலா ஒரு சம்பவமும் நடந்தது.


ஈரோடு தாலுக்காவில் தட்சிணமூர்த்தி என்ற பாஜக இளைஞரணி செயலாளர் கடை மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி எரிக்க முயற்சி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சதாம் உசைன் (25) அவரது நண்பர்களான ஆசிக் (23), ஜாபர் (27), கலீல் ரகுமான் (28) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றத்திற்காக பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள், சிடிஆர் அனலைஸ், வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக திட்டம் தீட்டி இச்சம்பவங்கள் நடந்ததா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாக்குமூலம் அடிப்படையில் அடுத்தக்கட்ட வழக்கு போடப்படும். 


மேற்கு மண்டலத்தில் இச்சம்பவங்களால் பதட்டமான சூழல் இருந்தது. தற்போது காவல் துறை பாதுகாப்பு மற்றும் சோதனைகள் காரணமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தவறு செய்தால் மாட்டி தான் ஆக வேண்டும். கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் காவலர்கள், திருப்பூர், ஈரோட்டில் தலா ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல்களை பாட்டில்களில் கொடுக்கக்கூடாது என பெட்ரோல் பங்க்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.




கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபாகாலணி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் நடந்த வழக்குகள் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஈரோடு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண