’பாகுபலி யானையை கண்காணிக்க ரேடியோ காலர்’ - வனத்துறை தீவிரம்..!

நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’  என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒரு ஆண் காட்டு யானை உலா வருகிறது. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும் அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் மாதக்கணக்கில் குடியிருப்பு பகுதிகளில் தனியே சுற்றித் திரிகிறது. யானைகள் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் இடம் விட்டு இடம் மாறிவிடும் வழக்கம் கொண்டது. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க பாகுபலி  யானை மேட்டுப்பாளையத்தில் தனியே சுற்றி வருகிறது. எவ்வித தயக்கமும் இன்றி சாலையை கடப்பது, மனித நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருவது, வழியில் கிடைக்கும் வாழை போன்ற விவசாய பயிர்களை உண்பது, தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவது போன்றவை இதன் தினசரி வாடிக்கையாகிவிட்டது.

Continues below advertisement


வனத்துறையினர் இந்த யானையை காட்டை நோக்கி விரட்டினாலும், மீண்டும் மீண்டும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கே திரும்பி வருகிறது. இதுவரை மனிதர்கள் யாரையும் இந்த யானை தாக்க முற்பட்டதில்லை என்றாலும், பயிர் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை அடர்ந்த காட்டினுள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் பதினான்கு பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து பாகுபலியை கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டனர். ரேடியோ காலர் பொருத்த முதலில் காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு சுற்றி வளைத்து அதனை சமவெளி பகுதிக்கு கொண்டு வந்த பின்னர் மயக்க ஊசி செலுத்த வேண்டும் என்பதால் அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இதன்படி நேற்றிரவு டாப் ஸ்லிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனத்துறை முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கலீம் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டது.


கும்கி யானை கலீம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கின் பின்புறமுள்ள பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கும்கி யானைகள் அடுத்தடுத்த நாட்களில் வந்தடைந்த பின்னர் மூன்று கும்கிகளின் உதவியோடு காட்டு யானையான பாகுபலியை சுற்றி வளைத்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola