கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவியது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா... நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 23 ம் தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர்.




இந்த சம்பவங்கள் குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்ததோடு, 500 க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் எண்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ரபிக் (26), ரமீஸ் ராஜா (36), சாதிக் பாஷா (32) ஆகிய 3 பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை நகரில் உள்ள காவல் துறையினருடன் வெளி மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பிற்காக கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினர், தமிழ்நாடு காமாண்டோ போலீசார், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண