மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள். பாதியில் நிற்கும் பசுமை வீடுகள். மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை. படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள நஞ்சப்பணூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை. இந்த பழங்குடியினர் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலசர் பழங்குடியினருக்கு, சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சங்கவி மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்வில் கிராமத்தில் முதல் தலைமுறை மாணவியாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.


அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவி சங்கவி தான். உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தார். சிறு வயது முதல் மருத்துவராக வேண்டுமென்ற இலட்சியத்தோடு படித்த சங்கவிக்கு, சாதி சான்றிதழ் தடையாக இருந்தது. இதனால் தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், சில மாதங்களில் படிப்பை பாதியில் கைவிட்டார். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் அரசின் பார்வை இந்த மாணவி மீது பட்டது. மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி அந்த கிராமத்திற்கு மின்சாரமும், தார் சாலைகளும் கிடைத்தன. அதேசமயம் இன்னும் பல குடிசை வீடுகளே உள்ள நிலையில், முறையான வசதிகள் கிராமத்திற்கு கிடைக்கமால் இருக்கின்றன.




ஏற்கனவே எழுதிய நீட் தேர்வில் சங்கவி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக அத்தேர்வு எழுத தயாராகி வந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் மாணவி சங்கவிக்கு உதவிக்கரங்களை நீட்டினர். விடா முயற்சியுடன் படித்து நீட் தேர்வில் மாணவி சங்கவி தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மலசர் பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதல் மருத்துவராக மாணவி சங்கவி படிக்கவுள்ளார். இது அக்கிராம மாணவர்களிடையே படிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.


இது குறித்து மாணவி சங்கவி கூறுகையில், ”12ம் வகுப்பு முடிச்ச பிறகு பெரிய பயம் இருந்தது . மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை. 2018ம் ஆண்டு தேர்வு எழுதிய போது, 6 மார்க்கில் தவறவிட்டேன். தொடர்ந்து 2 வது முறையாக தேர்வு எழுதுவதற்கு கடினமாக படிக்க முயற்சி செய்தேன். எங்களது ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை. அப்பா இறந்து ஒராண்டு ஆகிவிட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகள் தொடர முடியவில்லை, சிலபஸ் மாறிந்திருந்தது. அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். அவரை கூட இருந்து பார்க்க வேண்டிய நிலையில் படித்தேன். கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்கு படித்தேன்.  120 கட் ஆப் இருக்கும் நிலையில் 202 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். கஷ்டப்படும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்பதற்காக டாக்டர் கனவு வந்தது. தேர்வில் வெற்றி பெற்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னை பார்த்து இன்னும் பலர் இந்த கிராமத்தில் இருந்து படிப்பார்கள்.” என அவர் தெரிவித்தார்.