தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் நூறு நாட்கள் நிறைவடைகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியை பிடித்தது. ஆனால் வழக்கம் போல கோவை மாவட்டம் திமுகவிற்கு சாதகமாக இருக்கவில்லை. கோவை மாவட்டம் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போதே பிரதிநிதிகள் இல்லாத கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்தது.


திமுக ஆட்சி ஏற்ற நேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடியது. யாரும் எதிர்பாராத வகையில், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் தீவிரமடைந்தது. மே மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் 90 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டது. இது கடந்த ஓராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகம். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்ததன. இந்த நிலையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் உச்சமாக முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகையின் போது டிவிட்டரில் ''#GO BACK STALIN'' டிரெண்டானது.


அதிகரித்த கொரோனா தொற்று


கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கோவை மாவட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இருவரும் கோவையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகளை செய்தனர். அடிக்கடி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் ஆய்வு செய்தார். இதனிடையே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக அரசு முதன்மை செயலாளரும், வணிக வரித் துறை ஆணையருமான எம்.ஏ.சித்திக், வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.




மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாக ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காக ஆம்புலன்சில் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நீடித்தது. படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவியது. கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை காத்திருப்பதை தவிர்க்க ஜீரோ டீலே வார்டு, ஆக்சிஜன் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும் அரசு எடுத்த இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை.


ரெம்டெசிவிர், தடுப்பூசி சர்ச்சைகள்


சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து, கோவையிலும் விற்பனை செய்யப்பட்டது. இம்மருந்து வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால், டோக்கன் முறையில் ரெம்டெசிவிர் வழங்கப்பட்டது. இதனால் அவசரத் தேவைகளுக்கு அம்மருந்தை வாங்க முடியாமல் பலர் பரிதவித்தனர். பல குளறுபடிகள் ஏற்பட்டன. நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருத்துகளை அரசே மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கும் என அறிவித்ததை பின்னரே, ரெம்டெசிவிர் சர்ச்சைகள் ஓய்ந்தன.


தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டினாலும், போதிய தடுப்பூசிகள் இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றன. ஒவ்வொரு நாள் தடுப்பூசி போடப்படுவதும், மறுநாள் நிறுத்தப்படுவதும் என மாறி, மாறி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதனிடையே கோவைக்கு மாநில அரசு போதிய தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை என கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிடோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாகவும், ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகளை ஒதுக்காததே தட்டுப்பாடுக்கு காரணம் என ஆளும்கட்சியினர் பதிலளித்தனர்.


கோவை புறக்கணிக்கப்படுகிறதா?




மே மாதம் 20 ம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க. ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்தார். கொடிசியா மற்றும் குமரகுரு கல்லூரியில் அமைக்கப்பட்டு சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். முதலமைச்சர் வருகை பின்னரும் கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தை பிடித்தது.  இதையடுத்து கடந்த மே 30ஆம் தேதி இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கோவைக்கு வருகை தந்தார்.


இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை துவக்கி வைத்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அன்று அதுவரை டிவிட்டரில் ட்ரெண்டாக இருந்த #GOBACKSTALIN-ஐ பின்னுக்குத் தள்ளி #WeStandWithStalin- ஹேஸ்டேக் முதலிடத்திற்கு முன்னேறியது.


கோவை புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.


"கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர். அவர்கள் கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக பார்வையிட வேண்டும். அப்படி பார்த்தால் விமர்சிக்க மாட்டார்கள்.


எல்லா ஊரும் எங்கள் ஊர் தான். பாரபட்சம் பார்ப்பதில்லை. நான் ஏற்கனவே சொல்லியது போல திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிலும் எங்கள் ஆட்சி அமையும். எந்த பாரபட்சமும் காட்ட மாட்டோம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவை புறக்கணிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.



தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம் நாட்டில் முதல் முறையாக கோவையில் துவக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியை பெற்று தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.


கொரோனா தடுப்புப் பணிகள்


கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல், புதிய சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்துதல், தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த பகுதியிலேயே சிகிச்சை அளித்தல், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து வீடு வீடாக கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதேபோல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முடங்கிப் போக, திமுகவில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தன. ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரொனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.


கோவையில் கொரோனா தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், முடிந்தளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.