விமானம் ரிஸ்க்... ரயிலுக்கு மாறிய கடத்தல் கும்பல்: கோவையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்! ரூ.1.15 கோடி போதை வஸ்து!

8 பொட்டலங்களில் கார்பன் பேப்பரில் சுற்றியபடி வைக்கப்பட்டு 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான 2.3 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Continues below advertisement

கோவை ரயில் நிலையத்தில் நைஜீரிய நாட்டு இளைஞரிடம் 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான 2.3 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்து வருகிறது. கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல பல புதிய புதிய போதைப் பொருட்களும் போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில்  போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கோவை ரயில் நிலையத்தில் சென்றனர். தொடர்ந்து இரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் உடைமைகளுடன் சென்ற வெளிநாட்டு இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் அவரது உடமைகளுக்குள் 8 பொட்டலங்களில் கார்பன் பேப்பரில் சுற்றியபடி வைக்கப்பட்டு 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான 2.3 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து அவரை கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரிடம் இருந்து போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து கார்மெண்ட் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில்  ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்துள்ளது. மேலும் எட்வின் கிங்ஸ்லி 3 ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.


மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்து, தொடர்ந்து எட்வின் கிங்ஸ்லியிடம் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவை இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கோவையில் அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola