விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தில், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில், 626 தன்னார்வலர்கள் மூலம், 10,617 மாணவ, மாணவியர்களுக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில், 635 தன்னார்வலர்கள் மூலம், 11,990 மாணவ, மாணவியர்களுக்கும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், 428 தன்னார்வலர்கள் மூலம், 7,211 மாணவ, மாணவியர்களுக்கும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில், 843 தன்னார்வலர்கள் மூலம், 10,440 மாணவ, மாணவியர்களுக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில், 410 தன்னார்வலர்கள் மூலம், 7,409 மாணவ, மாணவியர்களுக்கும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில், 577 தன்னார்வலர்கள் மூலம், 11,092 மாணவ, மாணவியர்களுக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில், 567 தன்னார்வலர்கள் மூலம், 9,687 மாணவ, மாணவியர்களுக்கும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில்,
666 தன்னார்வலர்கள் மூலம், 11,968 மாணவ, மாணவியர்களுக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில், 430 தன்னார்வலர்கள் மூலம், 7,050 மாணவ, மாணவியர்களுக்கும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், 567 தன்னார்வலர்கள் மூலம், 12,488 மாணவ, மாணவியர்களுக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில், 514 தன்னார்வலர்கள் மூலம், 7,050 மாணவ, மாணவியர்களுக்கும், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், 394 தன்னார்வலர்கள் மூலம், 9,804 மாணவ, மாணவியர்களுக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில், 485 தன்னார்வலர்கள் மூலம், 9,447 மாணவ, மாணவியர்கள், விழுப்புரம் நகராட்சியில், 2,837 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 7,142 தன்னார்வலர்கள் மூலம், 1,29,090 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிக்கப்படும் விதம், அதனை புரிந்துகொண்டு மாணவர்கள் கல்வி பயிலும் விதம் குறித்து ஆய்வு செய்ததுடன், மாணவர்களிடம், கணக்கு பாடத்திலிருந்து, வாய்ப்பாடுகள் மற்றும் கணக்கு பயிற்சிகளை செய்து காண்பித்திடவும், அறிவியல் பாடத்திலிருந்து, நீர் உருவாகும் விதம் மற்றும் நீர் சேமிப்பு விதம் குறித்தம், கணினி தொடர்பான கற்றல் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்திலிருந்து மொழித்திறன் சார்ந்த கற்றல் திறனையும், பொருள் அறிதல் தொடர்பான கற்றல் திறன் கேட்டறிந்தபொழுது, மாணவர்கள் சிறப்பானதொரு பதிலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.
தொடர்ந்து, ஆசிரியர்களிடம், நாள்தோறும் பாடங்களை கற்பிக்கின்றபொழுது, ஒவ்வொரு மாணவரிடமும், தனித்தனியாக பாடங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்க வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விதங்களில் சிந்திப்பார்கள் இதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சி பெறும் என அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொருநாளும் கற்பிக்கும் பாடங்களிலிருந்து, வீட்டுப்பாடங்களை வழங்கிட வேண்டும். மேலும், மாணவர்களுக்கு புரியும் வண்ணம் செயல்முறை விளக்கத்துடன் பாடங்களை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாணவர்களிடம், தாங்கள் பயிலும் அடிப்படைக் கல்வியினை ஆர்முடனும், புரிதலுடன் பயின்றால் அடுத்துவரும் உயர்கல்விக்கு மிக பயனுள்ளதாக அமைந்திடும் எனவே, மாணவ, மாணவியர்கள் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தினை நல்ல முறையில் படித்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, பனையபுரம் ஊராட்சியில், ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்” மூலம், 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் கல்வி வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், 1092 மையங்களில், 1092 தன்னார்வலர்கள் மூலம், 4173 ஆண்களுக்கும், 16299 பெண்கள் என மொத்தம் 20472 நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் காவல 6 மாதம் ஆகும். நாள் ஒன்றிற்கு 2 மணிநேரம் வகுப்புகள் நடைபெறும்.