தமிழ்நாட்டில் நாளை ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு, ஏ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் இந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதனால், சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக வதந்தி பரவ தொடங்கியது.
தற்போது, இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைசி ஒருமணி நேரம் கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்” என்று கூறினார்.