இளம் பத்திரிக்கையாளர் பிரதீப்குமாரின் மரணம், தமிழ்நாடு  பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 28  வயதே நிரம்பிய நிலையில் ஆங்கில நாளேடான The Hindu செய்தித்தாளில் சினிமா பிரிவு செய்தியாளரை பணியாற்றி வரும் பிரதீப், கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஜயன், நிர்மலா தம்பதிக்கு இளைய மகனாக 1992-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார் .



இவர் பிறந்த சில நாட்களில் அவர் தந்தைக்கு மத்திய அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ்  விமான நிறுவனத்தில் ஸ்டெனோகிராபராக பணி கிடைக்க , குடும்பத்தோடு சென்னைக்கு குடி புகுந்துள்ளனர். தனது பள்ளிப் படிப்பினை சென்னையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்த பிரதீப் , செய்தித்துறையில் உள்ள ஆர்வ மிகுதியால் , SRM கல்லூரியில் BA ஜர்னலிசம் பட்டப்படிப்பினை முடித்து 2014-ஆம் ஆண்டு தனக்கு 22-வது வயது தொடங்கும்பொழுது , தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் தனது செய்தித்துறை பணியை தொடங்கினார் . பின்பு டெக்கான் க்ரோனிக்கல் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட ஆங்கில செய்தித்தாள்களில் பணியாற்றிய பிரதீப்  சென்னை மாநகராட்சி பகுதி செய்திகளை பின்தொடர்ந்து அதிக அளவில் வெளியிட்டார்.  பாதாள சாக்கடையில் ஏற்படும் கழிவுகளை மனிதர்களே நேரடியாக இறங்கி அள்ளும் அவலத்தை தடுக்க பெரிதும் அக்கறை காட்டி, அது தொடர்பான செய்திகளை வெளிக் கொணர்ந்தார்.



ஜனவரி மாதம் 2019-ஆம் ஆம் ஆண்டில், தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் பணியில் சேர்ந்த பிரதீப் , சினிமா செய்திகளை கவர் செய்து வந்தார் . முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் பேட்டி எடுத்து அவர்களை பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை வெளியிட்டு வந்தார். அவரது அக்காவுக்கு திருமணம் நிறைவு பெற்ற நிலையில் பிரதீப்பின் பெற்றோர் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய மும்முரமாக பெண் பார்த்துகொண்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் , அந்த மருத்துவமனையின் கழிவறைகள் மற்றும் கை அலம்பும் இடங்கள் மிக அசுத்தமாக இருக்கும் அவல நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அவரது பதிவை மையமாகக் கொண்டு பல செய்தி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டு அந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பின்பும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, நேற்று இரவு நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து இரவு 9.30  மணியளவில் அவரது உயிர் பிரிந்தது .



அவரது கடின உழைப்பு , சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிடுவது மற்றும் நகைச்சுவை உணர்வுகளால் கவரப்பட்ட அவருடன் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் அவரது திடீர் மறந்தால் பேரதிர்ச்சியில் உள்ளனர் . இறக்கும் தருவாயிலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை தைரியமாகவும் ஆதாரங்களுடனும் வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் பிரதீப் இந்த மரணம் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஊடகத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது இறப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள பல பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் தமிழ் திரைப்பட தினசரி பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல செய்தியாளர் சங்கங்கள் இரங்கல் செய்தியை ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .