சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் புகாரை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்துள்ளார். பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. 




இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பல கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. 


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


 






இதற்கிடையே சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் குறித்த பாலியல் வன்முறை புகார் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பள்ளி நிர்வாகத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்ததை அடுத்து தற்போது நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ளது. அதில், ‘‘எங்கள் கே.கே.நகர் பள்ளியின் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் குறித்த குற்றச்சாட்டுகளை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். ஆனால் குற்றச்சாட்டுகளில் கூறியுள்ளதுபடி எங்கள் நிர்வாகத்துக்கு அதுகுறித்த எவ்வித புகாரும் வரவில்லை. தற்போது இந்தப் புகார் எழுப்பப்பட்டிருப்பதை அடுத்து அது குறித்த நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்கப்பட்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் ரீதியான குற்றங்களைத் தங்கள் நிர்வாகம் எக்காலத்துக்கும் பொறுத்துக்கொள்ளாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது