நேற்று இரவு பத்து மணிக்கு மேல் திடீரென சென்னை முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. 


சென்னை கொளத்தூர், மணலி, புளியந்தோப்பு, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, என பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 


தூங்கி கொண்டிருந்த மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். காரணம் புரியாமல் தவித்தனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. 


மின்சார வாரிய இலவச எண் உட்பட அனைத்து கஸ்டமர் கால் நம்பர்களும் உபயோகத்தில் இல்லை. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.


விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி  நடைபெற்றன. ஆனாலும் விடியற்காலைதான் மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டது. 


மின்சார துண்டிப்பால் சென்னை மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு ஆளாகினர். இதில் கொசுக்கடியை வேற சமாளிக்க முடியாமல் தூக்கம் கெட்டு அழைய நேரிட்டது என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனிடையே அதிகாலை 3.30 மணியளவில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மீண்டும் கொடுக்கப்பட நிலையில் திருவெற்றியூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாமல் இருந்தது. 


காலை 6 மணிக்கு தான் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்பட்டது. இனி இதுபோன்ற அவலநிலை ஏற்படாத வண்ணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.  


இதுகுறித்து மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னையில் மின் தடை ஏற்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் சீரமைக்கப்பட்டது. 


மின் தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.