அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் பதிவாளர்கள் சென்னை நகரில் உள்ள கல்லூரி முதல்வர்கள் மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி ,
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கடந்தாண்டினை காட்டிலும் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வரும் 23ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடி வளாக மாணவர் சேர்க்கை மூலம் சேரலாம் என கூறினார்.
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மூலம் நடைபெறுகிற பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் போலியாக பேராசிரியர்கள் கணக்கு காட்டிய விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை பெற்ற பின்னர் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு SSA நிதியை நிறுத்தி இருப்பது அரசியலுக்காக தான் என தெரிவித்த அவர் ,
தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்கள் மும்மொழி கொள்கையை காட்டிலும் இருமொழி கொள்கையை தான் விரும்புவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
மலையாளம் ஹிந்தி போன்ற பிரிவுகள் இருக்கக்கூடிய கல்லூரிகளில் அந்தப் பிரிவுகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.