Cyclone Michaung: சென்னை வேளச்சேரி பகுதியில் 50 அடி பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

வெள்ளக்காடான வேளச்சேரி:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது 47 ஆண்டுகளுக்கு பிறகு  வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மழை கொட்டித் தீர்த்ததால் ஒட்டுமொத்த சென்னையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மோசமான பாதிப்பைச் சந்தித்தது.

தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.  இதனால் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

இந்த புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டது வேளச்சேரி, மடிப்பாக்கம் இடங்கள் தான்.  பொதுவாக, சென்னையில் எப்போதும் சாதாரண அளவில் மழை பெய்தாலே மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் பகுதியாக திகழ்வது வேளச்சேரி ஆகும். இந்த சூழலில், சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் தண்ணீர் மிகவும் மோசமாக தேங்கியுள்ளது. பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கிறது.

50 அடி ஆழத்தில் துடிக்கும் 2 உயிர்கள்:

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் அங்கிருந்த  அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. சுமார் எட்டு பேர் அதில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். சிக்கியிருந்த ஆறு பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 50 அடி பள்ளத்தில்  மழைநீர் தேங்கி உள்ளதால், சிக்கியுள்ளவர்கள் மீட்பதற்கு தாமதாமகிறது. இதனால், 6 ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீரை வெளியேற்றினால் மட்டுமே பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க முடியும். தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளே சிக்கி உள்ளவர்களின் உறவினர்கள் கவலையுடன் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.


மேலும் படிக்க

School, Colleges Leave: சென்னை, திருவள்ளூரில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செங்கல்பட்டு, காஞ்சி நிலை என்ன? - முழு விவரம்!