மிக்ஜாக் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. 


மிக்ஜாக் புயல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடி விட்டு, ஆந்திராவில் நேற்று (டிச.6) கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் வெள்ளம் தெருவைச் சூழ்ந்து, வீடுகளில் புகுந்தது.


இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு


இதை அடுத்து, டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. மழை படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, நீர் வடியத் தொடங்கி உள்ளது. ஆனாலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்டபுறநகர் பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.


கடந்த 3 நாட்களாக மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் சென்று சேரவில்லை. இதனால், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  


தொடர்ந்து 4ஆவது நாளாக விடுமுறை 


மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.  புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, இன்று (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் திருவள்ளூரிலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 


செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு விடுமுறை


இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுங்குன்றம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 07) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.