சென்னை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட் சம்பவத்தில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக அப்பெண்ணின் கணவர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜீனத் என்பவரின் மனைவி ஜோதி நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஜோதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதயத்தில் ரத்தநாளத்தின் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது நுண்துளை மூலமாக வலது கை மற்றும் கால்களில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அடுத்த சில தினங்களில் ரத்தம் உறைதல் பிரச்சினையால் ஜோதியின் வலது கை , இரண்டு கால்கள் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், ஜோதியின் உயிரை காப்பாற்றும் பொருட்டு அவரது வலது கையை டாக்டர்கள் அகற்றினர். மேலும் டாக்டர்களின் தீவிர முயற்சியால் ஜோதியின் வலது கால் காப்பாற்றப்பட்டது. இடது காலை காப்பாற்ற தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் ஜோதியின் கணவர் ஜீனத் ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஜோதிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். ஆனான் என்னிடம் போதுமான பணம் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய இல்லை என்பதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் ரத்தநாள அடைப்புகள் பாதிப்பு இல்லை என தெரிவித்த நிலையில் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறி கை மற்றும் கால்களில் உள்ள சதைகளை வெட்டி எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் வலது கையை அகற்ற வேண்டும் என கூறினர். இதய சிகிச்சைக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். ஆனால் என் மனைவி ஜோதியின் கையை எடுத்து விட்டார்கள். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எதற்காக ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. தவறான சிகிச்சையால் இது நடந்ததா? என மருத்துவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்" எனவும் ஜீனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் அந்தோனி ராஜன், "நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 2 தினங்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சினை இல்லாத நிலையில் நெஞ்சு வலி ஏற்பட இரத்தம் உறைதல் பிரச்சினை தான் காரணம் என கண்டறியப்பட்டது. இதனால் அவரது வலது கை செயலிழந்து விட்டது. உடனடியாக முழங்கைக்கு மேலே அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் துறை சார்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜோதியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாக" தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை; அரைநிர்வாணமாக சடலம் காட்டில் வீச்சு - நடந்தது என்ன?