பாலமலை பகுதியில் காட்டுப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்பு - கொலையாளி குறித்து  போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் விசாரணை.


 


 




தி.மு.க. கவுன்சிலர் கொலை:


ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பில் உள்ளார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.


 



இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலை செய்த நபர் யார் என்பது குறித்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


 




கணவன் - மனைவியிடம் விசாரணை:


கரூர் பாலமலை அருகே பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கரூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர். 


கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி திமுக பெண் 7 வார்டு கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.


இந்த வழக்கில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்ததில் சந்தேகத்தின் அடிப்படையில் ரூபா பயணித்த பேருந்தில் பயணம் செய்த கணவன் மனைவியான கதிர்வேல் - நித்யா ஆகிய இருவரை பிடித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் இந்த விசாரணையில் இறப்பிற்கு முன் பெண் கவுன்சிலர் ரூபா அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


 




திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடன் பேருந்தில் பயணம் செய்த கணவர், மனைவி இருவரை போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் முதல் கட்ட தகவல் அடிப்படையில் ரூபா அவர்கள் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளி வராததால் இது நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சந்தேகங்கள் உள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் சந்தேகங்கள் அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.