குடும்பச்சூழல் காரணமாக பக்ரீன் நாட்டுக்குச்சென்ற இடத்தில் உணவு கூடக் கொடுக்காமல் அடித்துத்துன்புறுத்துவதாகவும், எங்களை இங்கிருந்து மீட்டுவிடுங்கள் என சென்னையைச்சேர்ந்த 3 பெண்கள் கண்ணீருடன் அனுப்பிய வாட்ஸ் அப் பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


வெளிநாடுகளுக்குப் பணிக்குச் சென்று மனரீதியாகப் பாதிக்கப்படுவதோடு பல்வேறு துன்புறுத்தல்களையும் பலர் அனுப்பி வருவதாக வரும் தகவல்களைப்பார்க்கும் பொழுதெல்லாம் என்ன வேலையாக இருந்தாலும் சரி அதனை நம் நாட்டிலேயே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை நம் மனதில் ஆழமாக பதியச்செய்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் சென்னையில் தற்போது அரங்கேறியுள்ளது. குடும்ப சூழல், கணவனைப்பிரிந்த பெண் தன்னுடைய மகன், மகள்களைக்காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறுக் காரணங்களை முன்வைத்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியினைச்சேர்ந்த 3 பெண்கள் பக்ரீன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் எங்களை இங்கிருந்து மீட்டுவிடுங்கள் என கண்ணீரோடு அப்பெண்கள் பதிவிட்ட வீடியோ பதிவோடு அரசின் உதவியை நாடியுள்ளனர் அப்பெண்களின் குடும்பத்தினர்.



புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில் பகுதியினைச் சேர்ந்தவேளாங்கண்ணி, வடிவுக்கரசி,வள்ளி ஆகிய மூன்று பேரும் உறவுக்காரப்பெண்கள். இவர்கள் மூவரின்  வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்துள்ளது. வேளாங்கண்ணி கணவரைப்பிரிந்து மகள்களுடன் தாயின் வீட்டில் வசித்து வருகிறார். அதேப்போன்று தான் வடிவுக்கரசி மற்றம் வள்ளி ஆகியோரும் கணவனைப்பிரிந்து அவர்களது தாயுடன் வசித்து வந்த நிலையில் குடும்பத்தேவைகளுக்காக வீட்டு வேலைச்செய்து வந்துள்ளனர். இருந்தப்பொழுதும் அவர்களின் பொருளாதார நெருக்கடியினை அவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  அதிலும் ஊரடங்கு காலத்தில் சொல்ல முடியாத அளவிற்கு துயரத்தினைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில் தான்  குடும்ப கஷ்டம் மற்றும் வேலையில்லாத நிலைக்குறித்து நண்பர்களுடன் பேசிய பொழுது வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த 3 பெண்களும் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்றால் நல்ல சம்பாரிக்கலாம், குடும்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும் என அதற்கான முயற்சியினையும் எடுத்துள்ளனர். இதற்காக கள்ளக்குறிச்சி டிராவல் ஏஜென்சியினை அணுகி பாஸ்போட், விசா ஆகியவற்றினைப்பெற்றுக் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் பஹ்ரைன் சென்றுள்ளனர். முன்னதாக கொரோனா பரிசோதனைகளையும் இவர்கள் மேற்கொண்டுவிட்டனர்.


குடும்ப கஷ்டத்தினைத்தீர்த்து விடப்போகிறோம் என்ற பல்வேறு கனவுகளோடு சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி தான் காத்திருந்தது. வேளாங்கண்ணி, வள்ளி, வடிவுக்கரசி ஆகிய 3 பெண்களும் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் அவர்களுக்கு உணவு கூட வழங்காமல் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதோடு மட்டுமின்றி அறையில் வைத்து அடைத்துள்ளனர். இந்த சூழலில் தான் தன்னிடம் இருந்த மொபைல் போனில் மூலம் உறவினர்களுக்கும் அங்கு படும் துயரத்தினை வாட்ஸ் அப் வாயிலாக தெரிவித்துள்ளனர். அதில் “எங்க ரொம்ப அடிக்கிறாங்க, சாப்பாடு தரல, அறை அடைச்சு வச்சிருக்காங்க, குடும்ப கஷ்டத்துக்காக இங்க வந்தோம், ஆனால் இங்க ரெம்ப கஷ்டப்படுகிறோம். நாட்டிற்கு செல்லவும் அனுமதி தரவில்லை எனவும், பஹ்ரைன் எம்பசியிடம் கேட்டப்பொழுது 2 லட்ச ரூபாய் கொடுக்க சொல்றாங்க. எங்களாள முடியாது“, தயவு செய்து எங்களக் காப்பாத்துங்க  என அழுதப்படி வீடியோவில் இருந்தது.  இதனைப்பார்த்த உறவினர்கள் என்ன செய்வது அறியாமல் திகைத்து நின்றபொழுதுதான் அரசின் உதவியினை நாடியுள்ளனர்.



 இதனையடுத்து புதுவண்ணாப்பேட்டை துணை காவல் ஆணையரிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதோடு வாட்ஸ் அப்பில் வெளிநாட்டில் உள்ள மூன்று பெண்கள் அனுப்பிய வீடியோவினையும் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். இதுத்தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தொடர்புக்கொண்டும், தற்பொழுது பஹ்ரைன் நாட்டில் எங்கு இருக்கிறார்கள்? என்ன நடந்து வருகிறது? எப்படி மீட்புக்குறித்து குறித்து அதிகாரிகளிடம் பேசிவருவதோடு, அவர்களை விரைவில் தாயகம் திருப்பிக்கொண்டுவருவதற்கு தீவிர முயற்சியும் போலீசார் தரப்பில் எடுக்கப்பட்டுவருகிறது.


என்ன தான் சினிமாக்களிலும், நிஜ வாழ்க்கையிலும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செய்வோர் படும் துயரங்களைப்பார்த்தாலும், குடும்பச்சூழல் நம்மை அந்த இடத்திற்குத் தான் தள்ளுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை. இனிமேலாவது வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.