சென்னை வேளச்சேரியில் 80 அடி பள்ளத்தில் விழுந்த 2 தொழிலாளர்களை தேடும் பணி 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களை விரைவாக மீட்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.



பள்ளம் ஏற்பட்ட இடம்


பெருமழையில் சிக்கிய சென்னை - தவிக்கும் வேளச்சேரி


மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கின. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம் பகுதிகளில் இன்னும் முழுமையாக மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி பெட்ரோல் பங்க் அருகே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 80 அடி பள்ளத்தில் தவறுதலாக 4 பேர் விழுந்தனர். அதில், 2 பேர் மீட்கபட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 3 வது நாளாக நடைபெற்று வருகிறது.


தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்


தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் தமிழக தீயணைப்பு வீரர்களும் இணைந்து அந்த இருவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டடத்திற்கு அடித்தளம் போடுவதற்காக தொழிலாளர்கள் அங்கு பள்ளம் தோண்டி வந்துள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக பெருமழை பெய்ததால் சிறிய அளவில் தோண்டப்பட்ட பள்ளம் விரிசல் விட்டு 80 அடி பள்ளமாக திடீரென தோன்றியது. அங்கு பணியாற்றி வந்த 4 பேர் அந்த பள்ளத்தில் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பிறகு இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.


பள்ளத்தில் சிக்கியிருக்கும் 2 பேரில் நிலை என்ன ?


மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. பள்ளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளதால் தொழிலாளர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு


தமிழக அமைச்சர்கள் கேஎன்.நேரு, சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்திய நிலையிலும் பள்ளத்தில் விழுந்த அந்த இருவரும் இன்னும் மீட்கப்படாதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






தீவிர விசாரணையில் காவல்துறை


இந்நிலையில், கட்டடம் கட்ட முறையான அனுமதி வாங்கப்பட்டுள்ளதா ? பள்ளம் தோண்டும் பணிக்கு எத்தனை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். கன மழை பெய்யும் என்று அரசு எச்சரித்த பின்னரும் கட்டடத்திற்கான பணியை தொடர்ந்து மேற்கொள்ள தனியார் நிறுவனம் வற்புறுத்தியதாக கூறப்படும் தகவல் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.