சென்னையில் மாநகர போக்குவரத்து சேவை சீரானது என தமிழ்நாடு மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 


மிக்ஜான் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கியது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள வெள்ள நீரை அகற்ற மாநகராட்சி சார்ப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


போலவே, சென்னை புறநகர் ரயில் சேவை இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி பறக்கும் ரயில் ஆகியவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.


சென்னை சென்ட்ரல்- கடற்கரை- சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி திருவொற்றியூரில் இருந்து சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில் சென்னை மாவட்டம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலைகுலைந்து போனது. 24 மணி நேரமாக தொடர்ச்சியாக மழை பெய்ததால் தமிழ்நாடு அரசாலும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை. அதற்குள் சென்னையை வெள்ளம் சூழந்தது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதோடு, நிவாரண முகாமுக்கு அழைத்து சென்றனர். நிலைமை சீராகி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். 


இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 


இந்த கடிதமானது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மூலமாக பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெள்ளச் சேதம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சரி செய்ய தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


அதேபோல் சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ. 561.29 கோடி வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய சார்பில் வெள்ள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.